Tag: Section 77A

  • Sec 77A: Case Status & Key Issues

    Sec 77A: Case Status & Key Issues

    For backstory, read on…

    1908 ஆம் ஆண்டின் பதிவு சட்டத்தில் தமிழ் நாடு அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட 77A திருத்தப் பிரிவு,  உயர்நீதி மன்றத்தின் பல பெஞ்சுகள் முன் கேள்விக்குள்ளாக்கப்பட்டது.

    இந்த வழக்குகளில் உள்ள சட்டப்பிரச்சினைகளை ஆழமாக விசாரிக்க வேண்டும் என்று கருதிய உயர்நீதிமன்றம், எல்லா வழக்குகளையும் ஒரு விரிவாக்கப்பட்ட லார்ஜர் பெஞ்சுக்கு அனுப்பியது. அவற்றின் மீது இப்போது விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

    வழக்கின் நிலை | Status of Hearings

    பல கட்ட விசாரணைகளுக்குப் பின், இறுதியாக 2024 ஏப்ரல் 15, 16 தேதிகளில் விசாரணை நடைபெற்றது. அந்த விசாரணைகளுக்குப் பின், ஏப்ரல் 22 ந் தேதிக்குள் வழக்கறிஞர்கள் தங்கள் எழுத்துப் பூர்வ வாதங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, தீர்ப்பின் தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்தி வைத்துள்ளனர் நீதியரசர்கள்.

    ஆக, தீர்ப்பின் தேதிக்காக அனைத்து தரப்பினரும் காத்திருக்கின்றனர்.

    லார்ஜர் பென்ச்சில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் இந்த வழக்கில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

    முந்தைய கட்டுரைகள் | Previous Articles

    இந்த வழக்கைப்பற்றிய முழு விவரமும் தெரிந்து கொள்ள கீழ்கண்ட லிங்குகளை கிளிக் செய்யவும்

    1. பதிவு சட்டம் தொடர்பான முதல் கட்டுரை
    2. முதல் கட்டுரையின் தொடர்ச்சி

    திருத்தத்தின் விவரங்கள் சுருக்கமாக | Brief Details of the Amendment

    1908 பதிவுச் சட்டத்தில் புதிய 77A பிரிவை புகுத்தி செய்யப்பட்ட திருத்தம், மாவட்ட பதிவாளர்களுக்கு மோசடி சொத்து ஆவணங்களை ரத்து செய்ய அதிகாரத்தை வழங்குகிறது.

    புதிய பிரிவு 77A | New Section 77A

    மோசடிப் பத்திரங்களை ரத்து செய்ய சிவில் நீதிமன்றங்களைத் தான் நாட வேண்டிய நிலை இன்று உள்ளது. இது  எத்தனை காலம் ஆகும் என்ற காலவரையறை இல்லாததால், மக்களின் கோரிக்கை மற்றும் நீதிமன்ற அறிவுறுத்தல் காரணமாகத் தான் இந்தத் திருத்தம் அரசால் கொண்டு வரப்பட்டது.

    நீதிமன்றத்தில் விவாதிக்கப்படும் முக்கிய கேள்விகள் | Key Issues Being Debated

    ஆரம்பத்தில், இந்தத் திருத்தம் பழைய பத்திரங்களுக்கும், அதாவது இந்தத் திருத்தம் நடைமுறைக்கு வருவதற்கு முன் பதியப் பட்ட பத்திரங்களுக்கும் பொருந்துமா என்பது தான் முக்கிய விவாதமாக இருந்தது.

    ஆனால், இப்போது இன்னும் பல முக்கிய வாதங்கள் முன் வந்துள்ளன.

    சொல்லப்போனால், இந்தச் சட்ட திருத்தமே செல்லாது என அறிவிக்க வேண்டும் என்ற கோணத்தில் தான் திருத்தத்தை எதிர்க்கும் தரப்பினர் வாதத்தை முன் வைத்துள்ளனர்.

    அந்த வாதங்களின் தொகுப்பைக் கீழே தருகிறோம்:

    ஒரு ஆவணம் மோசடி ஆவணமா இல்லையா என்பதை தீர்மானிப்பதற்கு சிவில் நீதிமன்றத்திற்கு மட்டுமே உரிமை இருக்கிறது. மாவட்ட பதிவுத் துறைத் தலைவர் ஒரு சட்டம் பயின்றவராக இருப்பது அரிது. பதவி உயர்வு பெற்று அந்தப் பதவிக்கு வருபவர். எனவே, அவரிடம் இந்தப் பொறுப்பை ஒப்படைக்க முடியாது.

    2. ஒரு மோசடிக்குப் பின் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் நிலை | Status of Subsequent Documents

    ஒரு மோசடி ஆவணம் பதியப்பட்டு, அந்த மோசடி ஆவணத்தைத் தொடர்ந்து பல ஆவணங்கள் பதியப்பட்டு இருக்கும். அதனைத்தொடர்ந்து அந்த சொத்து உருமாற்றம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.வாங்கியவர்களோ அல்லது விற்பவர்களோ அப்பாவிகளாக (innocent buyers or sellers) இருப்பார்கள்.

    இந்நிலையில் பாதிக்கப்பட்டவர் ஒரு மோசடி ஆவணத்தை ரத்து செய்யப் புகார் மனு செய்து அந்த மோசடி ஆவணம் ரத்து செய்யப்பட்டால்,  அதன்பிறகு ஏற்படுத்தப்பட்ட சொத்துப் பரிமாற்ற ஆவணங்களின் நிலை பற்றி இந்தச் சட்டத் திருத்தம் எதுவும் சொல்லவில்லை.

    அதாவது, மோசடி ஆவணத்தை ரத்து செய்வது பற்றி இந்தச் சட்டத்தில் இருக்கும்போது, மோசடி ஆவணத்தைத் தொடர்ந்து பதியப்பட்ட பத்திரங்களை ரத்து செய்யலாமா, கூடாதா என்பதைப் பற்றித் தெளிவாக இந்தச் சட்டப் பிரிவு 77Aலோ அல்லது வேறெங்குமோ எதுவும் குறிப்பிடப்படவில்லை.

    3. தவறு செய்த அதிகாரியே புகாரை விசாரிக்கலாமா? | Can officials involved in fraudulent document issue, investigate their own wrongdoing?

    ஒரு ஆவணமானது மோசடி ஆவணம் என கண்டறியப்பட்டால், அந்த மோசடி ஆவணத்தை பதிவு செய்த பதிவாளர் மீது புதிய சட்டப் பிரிவு 81A படி குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படலாம். அப்படி இருக்கும் போது, அவர் பதவியில் இருக்கும்போது அந்த ஆவணம் மோசடி ஆவணமா இல்லையா என்பதை உறுதி செய்யும் அதிகாரம் அவரிடமே இருக்கக் கூடாது.

    4. விசாரணை இன்றி ஆவணங்களை ரத்து செய்வது நடந்தால்… | Cancellation of Documents Without Investigation

    இந்தச் சட்டம் நடைமுறைப் படுத்தினால், எந்த வித விசாரணையும் இன்றி ஒரு ஆவணத்தை மாவட்டப் பதிவாளர் ரத்து செய்ய வாய்ப்பிருக்கிறது.

    5. வழக்கு நிலுவையில் இருக்கும் போது… | Pending Civil Court Cases

    ஏற்கனவே பதியப்பட்டுள்ள மோசடிப் பத்திரம் சம்மந்தமாக சிவில் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அது சம்மந்தமாக ஒரு புகார் மனுவை மாவட்டப் பதிவாளர் விசாரணை செய்யும்போது, ஒரே பிரச்சினை சம்மந்தமாக ஒரே ஆவணம் சம்மந்தமாக இரண்டு இடங்களில் விசாரணை நடக்கும் நிலை ஏற்படலாம். இது மேலும் குழப்பத்தைத் தான் ஏற்படுத்தும்.

    6. முடிக்கப்பட்ட வழக்குகள் மீதும் புகார் அளிக்க வாய்ப்பு | Scope for Reopening Decided Cases

    சிவில் நீதிமன்றம் ஒரு உத்தரவு பிறப்பித்த பிறகு, மறுபடியும் இந்தப் பிரிவு 77A ன் கீழ் மாவட்டப் பதிவாளருக்கு மனு செய்யும் வகையில் இந்த சட்டப் பிரிவு இருக்கிறது.

    7. புகார்களுக்குக் கால வரையறை இல்லாமை | No Time Limit for Filing Complaints

    இந்தச் சட்டப் பிரிவில் கால வரையறை எதுவும் கூறப்படவில்லை. எனவே எந்த ஒரு காலத்திலும் ஏற்படுத்தப்பட்டுள்ள மோசடி ஆவணங்களையும் ரத்து செய்வதற்கு இந்த சட்டப் பிரிவின் கீழ் புகார் மனு செய்ய முடியும்.

    8. விதிகள் முறையாக வகுக்கப் படவில்லை | Rules are not framed as per procedure

    இந்த சட்டத் திருத்தத்திற்கான உரிய விதிகள்(Rules) முறையாக வகுக்கப்படவில்லை. பதிவுத்துறைத் தலைவரின் சுற்றறிக்கை மூலம் மட்டுமே விசாரணைகள் நடைபெறுகிறது.

    சட்டத் திருத்ததின் எதிர்காலம் | Future of the Amendment

    இப்படி வலுவான வாதங்களை சட்டத் திருத்தத்தை எதிர்ப்பவர்கள் முன்வைத்துள்ள பின்னணியில் தான் இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    தீர்ப்பு எப்படி வந்தாலும், எதிர் தரப்பு மேல்முறையீட்டிற்கு செல்வதைத் தடுக்க முடியாது என்பதாகத் தான் தோன்றுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

  • Forged Document Cancellation: Sec. 77A |  Updates

    Forged Document Cancellation: Sec. 77A | Updates


    Status of Court Cases on Section 77A

    For the backstory, read on…

    மோசடி  பத்திரங்களை  ரத்து செய்யும் அதிகாரம்  மாவட்டப் பதிவாளருக்கு வழங்கி  இந்திய பதிவுச் சட்டத்திற்கு, தமிழ் நாடு அரசால் கொண்டுவரப்பட்ட  சட்ட திருத்தம், (Section 77A of Registration Act 1908)   பற்றிய வழக்குகள்  இன்னும்  ஒரு முடிவுக்கு வரவில்லை.

    மீண்டும் இந்த வழக்குகள் இந்த மாதம்(மார்ச்) 26 அன்று விசாரணக்கு வர இருக்கிறது.

    March 26 Hearing: Case Posted to 4th April, 2024.

    The case was heard on 4th April 2024, and finally on 15th and 16th April 2024. The advocates were then asked to submit their written submissions by 22nd April 2024, and the judgme

    nt was reserved.


    பதிவுத்துறைத் தலைவரின் சுற்றறிக்கை

    Circular of Inspector General Of Registration

    சென்னை உயர் நீதிமன்றத்திலும்,  அதன் மதுரைக் கிளையிலும்,  இந்தச் சட்ட திருத்தம் (77A)சம்பந்தமாக  தொடரப்பட்ட வழக்குகள்  காரணமாக, பதிவுத்துறைத் தலைவர் (Inspector General of Registration),  கடந்த  2023 செப்டம்பர் மாதம்,  மறு அறிவிப்பு வரும் வரை  இந்தச் சட்ட திருத்தத்தின் கீழ்  எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டாம்  என்று  சுற்றறிக்கை அனுப்பிய பின்,    மனுக்கள் எல்லாம்  அங்கங்கே  தங்கிப் போயின.

    பதிவுத் துறை தலைவர் இப்படி  ஒரு சுற்றறிக்கை அனுப்பத் தேவை என்ன?

    Reason for the Inspector General of Registration to issue such a Circular

    இந்தச் சட்டத் திருத்தத்திற்கு  உயர் நீதிமன்றம் தடை விதிக்காமல் இருந்தாலும் கூட,  இதில் உள்ள சட்ட பிரச்சனைகளை பற்றி  இறுதியாக முடிவு எடுக்க,  எல்லா வழக்குகளையும்  ஒரு  விரிவாக்கப்பட்ட அமர்வுக்கு (larger bench)  அனுப்பப்பட்டு விட்ட காரணத்தினால்,  அந்த அமர்வின் தீர்ப்பு வரும் வரை  மேற்கொண்டு எந்த  நடவடிக்கையும்  பதிவுத்துறையால்  எடுக்க வேண்டாம் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே எல்லா நடவடிக்கைகளையும் ஒத்தி வைக்க வேண்டிய தேவை பதிவுத் துறைக்கு ஏற்பட்டது.

    சென்னை உயர்நீதிமன்றத்தின்  இந்த முடிவுக்கு பின்னணி என்ன?

    Background to the Madras High Court’s Decision; Why Larger Bench?

    இந்தச் சட்டத்தை  முன் தேதியிட்டு (retrospective effect)  அமல்படுத்த முடியுமா?  என்பது உயர் நீதிமன்றத்தின் முன்னுள்ள ஒரு முக்கிய கேள்வி.

    இந்த சட்ட திருத்தம் சம்பந்தமாக ஒரு வழக்கு, மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு வந்த போது, இந்தச் சட்டம் என்றைக்கு அமலில் வந்ததோ  (அதாவது 16 ஆகஸ்ட் 2022),  அதற்குப் பின்னர் பதியப்பட்ட போலி பத்திர பதிவுகளை பற்றி மட்டும் தான்  விசாரணை மேற்கொண்டு ரத்து செய்ய முடியும் என்று தீர்ப்பு வழங்கினார் நீதியரசர்.

     ஏற்கனவே மற்றொரு நீதியரசர், இந்தச் சட்டத் திருத்தத்தில்  அப்படி எதுவும் குறிப்பிடவில்லை,  எனவே  பழைய  போலி பத்திர பதிவுகளுக்கும்  இந்தச் சட்ட திருத்தம் பொருந்தும் என்று கூறி இருந்தார்.

    முதலில் குறிப்பிட்ட இந்தச் சட்ட திருத்தம் பழைய பத்திரங்களுக்குப் பொருந்தாது என அளிக்கப்பட்ட தீர்ப்பு, இப்போது தீர்ப்பளித்த நீதியரசரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படவில்லை என்பது, பின்னர் மற்றுமொரு நீதியரசர், (மூன்றாவது நீதியரசர்), இன்னொரு வழக்கு விசாரணக்கு வந்தபோது தெளிவு படுத்தி, இப்படி மாறுபட்ட இருதீர்ப்புகள் உள்ள நிலையில்,  இந்த பிரச்சினையை ஒரு விரிவான அமர்வு தான் (larger bench) விசாரிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்து, அதை உயர்நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்திற்கும் தெரியப்படுத்திவிட்டார். இப்படித்தான் விரிவான அமர்வுக்கு வழக்கு சென்றுள்ளது.

     விரிவாக்கப்பட்ட அமர்வுக்கு அனுப்பி வைக்கப்பட்ட முடிவு, சென்ற 2023 ஆம் ஆண்டு  மார்ச் மாதம் 27ஆம் தேதி  வழங்கப்பட்டது. அதனடிப்படையில் விசாரணை நடந்து கொண்டும் இருக்கிறது. எனவே தான், பதிவுத்துறை தலைவர் எல்லா நடவடிக்கைகளயும் தற்காலிகமாக நிறுத்திவைத்து உத்தரவு இட்டுள்ளார்.

    விரிவான அமர்வில் விசாரணை-

    Proceedings before the Larger Bench

    சென்ற    வாரம்  21ஆம் தேதி (மார்ச் 2024) விசாரணைக்கு வந்த  போது,  அதுவரை  இந்தச்    சட்ட திருத்தத்தின் அடிப்படையில்  எடுக்கப்பட்ட  அனைத்து நடவடிக்கைகளையும் பற்றிய  முழு விவரங்களையும்  நீதிமன்றத்திற்கு    தர வேண்டும் என்று  நீதி அரசர்கள்  உத்தரவிட்டு உள்ளனர்.  மீண்டும் விசாரணை    இந்த  மார்ச் மாதம்  26 ஆம் தேதி  நடைபெறும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விரிவான அமர்வின் முன்னுள்ள பிரச்சினைகள்-

    Issues raised before the Larger Bench on Section 77A

     இந்தச் சட்ட திருத்தம்,  முன்பு பதியப்பட்ட  போலி பத்திரங்களுக்கும் பொருந்துமா என்ற கேள்வி மட்டுமல்லாமல்(retrospective effect),  இந்த வழக்குகள் வேறு பல  சட்ட பிரச்சனைகளையும்  முன்னிறுத்தி உள்ளது.    குறிப்பாக,  மாவட்ட பதிவாளருக்கு  இந்த அதிகாரத்தை  தரக்கூடாது, ஏனெனில்  அவர்   சட்டம் படித்தவராக  இருப்பதற்கு வாய்ப்பு இல்லை, எனவே அவரால் எது போலி பத்திரம் என்று கண்டறிய முடியாது,  என்பது போன்ற  வாதங்களும்  முன்வைக்கப்படுகின்றன.

    மேலும்,  இந்த போலி பாத்திரங்களை  ரத்து செய்வது சம்பந்தமான  வழிமுறைகள் விதிமுறைகள்  பற்றி  எந்த விதிகளையும் (rules) மாநில அரசு   இயற்றவில்லை.   பதிவுத் தலைவரின்  சுற்றறிக்கைகளும்,  கடிதங்களும் மட்டுமே  வழிகாட்டுதல்களாக உள்ளன.  இது சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கை என்பது மற்றொரு வாதம்.

    தீர்மானிக்கப்பட வேண்டியவை என்று நீதிமன்ற அமர்வால் வரையறுக்கப்பட்ட விஷயங்கள்-

    Issues framed by the Court to decide on Section 77A case

    ,இந்த வாதங்களை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு,  நான்கு  முக்கிய பிரச்சினைகளை  பற்றிய  தீர்வுக்கான  முயற்சியில் விரிவான அமர்வு(Larger Bench) ஈடுபட்டுள்ளது.

     அவை:

    i) பதிவுக்காக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தில் உள்ள வாசகங்கள்(recitals), அத்தகைய ஆவணம் மோசடியாக செயல்படுத்தப்பட்டதா (executed) அல்லது பதிவு செய்யப்பட்டதா (registered) என்பதை தீர்மானிக்க ஆய்வு செய்யப்படலாமா;

    ii) ஒரு ஆவணத்தில் விவரங்கள் மட்டுமே கேள்விக்குள்ளாகும் போது, அந்த ஆவணம் மட்டுமே செல்லுபடியற்றது என்று கருத முடியுமா அல்லது அந்த ஆவணங்களைக் கூட பதிவுச் சட்டத்தின் பிரிவு 77 ஏ இன் கீழ் சார்பதிவாளரால் ரத்து செய்ய முடியுமா;

    iii) பதிவுச் சட்டம், 1908 இன் பிரிவு 22 ~ ஏ அல்லது 22 ~ பி க்கு முரணாக ஆவணங்களை பதிவு செய்வதற்கு மட்டும் பிரிவு 77 ஏ இன் கீழ் அதிகாரம் கட்டுப்படுத்தப்பட வேண்டுமா?

    iv) பதிவுச் சட்டத்தின் பிரிவு 77A இன் கீழ் அத்தகைய அதிகாரத்தைப் பயன்படுத்துவது இயல்பில் எதிர்காலமாக இருக்க முடியுமா(Prospective Date) அல்லது இயற்கையில் முன்தேதியிட்டு(retrospective date) இருக்க முடியுமா?

    என்பனவாகும்..

    பிப் 2 ம் தேதிய தீர்ப்பு

    இதற்கிடையில்,  சட்டம் அமலுக்கு வந்த  16 ஆகஸ்ட் 2022 க்கு பிறகு  பதிவு செய்யப்பட்ட ஒரு போலி பத்திரம்  ரத்து செய்ய வேண்டும் என்று கூறி  மாவட்டப் பதிவாளரை ஒருவர் அணுகிய போது,  மேற்குறிப்பிட்ட சுற்றறிக்கையைச் சுட்டிக்காட்டி  இப்போது எந்த விசாரணையும் மேற்கொள்ள முடியாது.  என்று மாவட்டப் பதிவாளர் திருப்பி அனுப்பி உள்ளார்.  இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில்  அந்த விரிவான அமர்வுக்கு அனுப்பப்பட்ட பிரச்சினை,  பழைய  போலி பத்திரங்களுக்கு இந்தச் சட்ட திருத்தம் பொருந்துமா என்பதை பற்றி  ஆராய்வதற்குத் தானே ஒழிய(retrospective effect),  இந்தச் சட்ட திருத்தம் அமலுக்கு வந்ததற்குப் பின்(prospective effect)  பதியப்பட்ட  போலிப்   பத்திரங்கள் மீது  விசாரணை நடத்தி  முடிவெடுப்பதற்கு எந்தத் தடையும் இல்லை என்ற  மனுதாரரின் வாதத்தை பிப் 2-ம் தேதி நீதிமன்றம்  ஏற்றுக் கொண்டுள்ளது.இது வேறொரு அமர்வு.

     ஆனாலும்,  மேலும் பல பிரச்சினைகளும் கூட  தீர்க்கப்படாமல் இருக்கும் பின்னணியில்,  விரிவாக்கப்பட்ட அமர்வின்  அதாவது லார்ஜர் பெஞ்சின்  தீர்ப்பு   வரும் வரை  இந்த பிரச்சனையில்  எந்த முன்னேற்றமும் ஏற்படப் போவதில்லை என்பது தெளிவு.ஏனெனில் தீர்ப்புகள் எப்படி வந்தாலும், அவற்றை அமல் படுத்த பதிவுத்துறையிலிருந்து  சுற்றறிக்கை  அனுப்பப்பட்டால் அன்றி,  மாவட்டப் பதிவாளர் அலுவலகங்களில்  எந்த மனுவையும் வாங்க  மாட்டார்கள்.

    நிறைவாக…

    இந்தச் சட்ட திருத்தம் கொண்டு வந்தது  நீதிமன்றத்தின்  தொடர் வற்புறுத்தலின் பெயரிலும் அறிவுரையின் பெயரிலும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்தச் சட்ட திருத்தம் வந்த பின்னரும்  அரசின் இந்த நடவடிக்கையை  நீதியரசர்கள்  வெகுவாகப் பாராட்டினர்.  ஆனாலும்,  சட்டத்தை அமல் நடத்தும் போது  முளைக்கும் பிரச்சினைகளை  தீர்க்காமல்  அடுத்த கட்டத்திற்கு நகர முடியாது என்பது தான் உண்மை.

     இப்போது நீதிமன்றமும்,  அரசும்    இந்த பிரச்சனையை ஒரு முடிவுக்கு கொண்டு வருவதில்  ஆர்வத்துடன் செயல்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள்.

     விரிவு நீதிமன்ற அமர்வின் தீர்ப்பிற்காக  அனைத்து தரப்பினரும்  காத்திருக்கின்றார்கள். அடுத்த நகர்வு மார்ச் 26 ம் தேதிக்குப் பின்…